CM MK Stalin Speech: தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்பு.. சஸ்பென்ஸை உடைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
CM MK Stalin Speech: தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு அறிமுகமாகியுள்ளது என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது என இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

CM MK Stalin Speech: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரும்பின் தொன்மை நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று (ஜனவரி 23) நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம். இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது.