தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mk Stalin: ’நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை’ பட்டமளிப்பு விழாவில் பாட்டுப்பாடி அசத்திய முதலமைச்சர்

MK Stalin: ’நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை’ பட்டமளிப்பு விழாவில் பாட்டுப்பாடி அசத்திய முதலமைச்சர்

Kathiravan V HT Tamil
Nov 21, 2023 12:43 PM IST

“பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் உள்ளதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலான இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடிகிறது”

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாடகி பி.சுசீலாவுக்கு முனைவர் பட்டம் வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாடகி பி.சுசீலாவுக்கு முனைவர் பட்டம் வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த பல்கலைக்கழகத்திற்குதான் மாநிலத்தை ஆளும் முதலமைச்சரே வேந்தராக இருக்கும் பெருமை உள்ளது. முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான் பல்கலைக்கழகங்களால் சிறப்பாக வளர முடியும் என்று நினைத்ததால்தான் 2013ஆம் ஆண்டே அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை நாம் மனதார பாராட்டலாம்; நானும் மனம் உவந்து பாராட்டுகிறேன்.

இசைப்பல்கலைக்கழகத்தின் சார்பில் பாடகி பி.சுசீலா, சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பெருமை படுத்தி இருகிறோம். பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. வெளியூர் பயணத்தின்போது காரில் அவரது பாடல்களை கேட்டுக் கொண்டே போவேன்.

”இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை, உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை. காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை. உன்னை கண்டுகொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை” என்ற பாடல் எனக்கு பிடிக்கும். மேடைக்கு வந்த உடனே நான் அவரிடம் நான் உங்கள் ரசிகன் என்று சொன்னேன். பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே யாரும் இருக்க முடியாது.

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் உள்ளதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலான இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடிகிறது. இதனால்தான் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதலமைச்சரே இருக்க வேண்டும் என நாம் சொல்கிறோம். இதற்காக சட்டமுன்வடிவையும் பேரவையில் நிறைவேற்றி உள்ளோம். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறது. நல்ல செய்தி வரும்.