EVKS Elangovan: சாவதற்கு முன் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னிடம் சொன்னது என்ன? போட்டு உடைத்த முதல்வர்!
என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ’உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது’ என்றுதான் கேட்பார். நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். ”நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்”-என்றுதான் சொல்வேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கிக்கொண்டிருந்தவர் நம்முடைய மதிப்பிற்குரிய திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். இரண்டு முக்கியமான தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்திருக்கிறோம். இருவருடைய இழப்பும் பெரிய இழப்பாகும். நாட்டுக்காக மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் இருவரையும் அறிந்தவன் என்ற முறையில் எனக்கும் இது தனிப்பட்ட இழப்புதான். டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் பொருத்தவரையில் அவர் பிறவி அரசியல்வாதி அல்ல. ஆனால், இளங்கோவன் அவர்கள் பாரம்பரியமிக்க ஒரு அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பேரனாக, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்களுடைய மகனாக! இப்படி ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்து இறுதி வரை அரசியல் வானில் வலம் வந்தவர்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் தமிழர்கள்!
வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக இல்லாத, ஆக விரும்பாத மன்மோகன் சிங் அவர்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு முறையல்ல, இரண்டு முறை, மொத்தம் பத்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் ஆட்சியை நடத்தக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறுத் திட்டங்கள் மன்மோகன் சிங் அமைச்சரவையில், 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள். 8 கேபினட் அமைச்சர்கள், 13 இணை அமைச்சர்கள் என்று மிக அதிக அளவில் தமிழர்கள் ஒன்றிய அரசில் கோலோச்சியது அவருடைய அமைச்சரவையில் தான். அதுவும் மிகமிக முக்கியமான பல துறைகளை தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலமாக எண்ணற்ற திட்டங்கள் நமக்கு கிடைத்தன.
உடல் நலத்தை விசாரிக்கும் ஈவிகேஎஸ்!
நண்பர் மதிப்பிற்குரிய திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், அவருடைய மறைவு என்பது நிச்சயமாக சொல்கிறேன் என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ’உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது’ என்றுதான் கேட்பார். நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். ”நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்”-என்றுதான் சொல்வேன். சொன்னார்,’நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை எம்.எல்.ஏ.-ஆக ஆக்கி இருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன், உழைப்பேன் உழைப்பேன்’-என்று உறுதியுடன் கூறினார்.