Sengottaiyan: செங்கோட்டையன் வைத்த கோரிக்கை! உடனே நிறைவேற்றிய முதல்வர்! நடந்தது என்ன?
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திக்சா ஆய்வு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

அதிமுக எம்.எல்.ஏ கே.ஏ.செங்கோட்டையன் வைத்த கோரிக்கை வைத்த நிலையில், தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
DISHA ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (15-02-2025) தலைமைச் செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். திட்டங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாக செலவிடுவது, திட்ட செயல்பாடுகளைக் கண்காணிப்பது, ஒன்றிய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே இணக்கமான நிலையை உருவாக்குவது, தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசினுடைய திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிவகை செய்வது ஆகிய பணிகளை இதன் மூலமாக நாம் செய்து வருகிறோம்.
செங்கோட்டையன் கோரிக்கை மீது நடவடிக்கை
கடந்த கூட்டத்தில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் நம்முடைய திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் PMAYG திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முனைவர் திரு. சுப்புராமன் (SCOPE) அவர்கள் கோரிக்கையை ஏற்று குழந்தைகளுக்கு கட்டப்படும் அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீடுத் தொகை 2025-26 நிதியாண்டிலிருந்து 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தொடக்கத்திலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமசாலைகளில் தமிழகம் முன்னோடி
பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தினை செயல்படுத்துவதைப் பொறுத்தவரை தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தத் திட்டத்தின் நான்காவதுகட்ட செயல்பாட்டை 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகையினை அடிப்படையாகக் கொண்டு 500-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, இதுவரை இணைப்புச் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இப்படியான 7 கிராமங்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கின்றன. வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி பெற்ற பிறகுதான் அங்கே இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்த முடியும். அதனால், ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்தக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் மீண்டும் ஒன்றிய அரசுக்கு இது குறித்து வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் ஊரக குடியிருப்பு திட்டம்
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தினப் பொறுத்தவரை ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை 1,20,000 ரூபாய் ஆகும். இதில், ஒன்றிய அரசு 72,000 ரூபாயும், மாநில அரசு 48,000 ரூபாயும் வழங்கி வரும் நிலையில், மாநில அரசு கூடுதலாக 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மேற்கூரை அமைப்பதற்காக வழங்கி வருகிறது. 2021-2022 ஆண்டு வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை, 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை கட்டும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நமது ஆட்சியில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், நான் தொடக்கத்திலேயே தெரிவித்தபடி, அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்தக் குழு மூலமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை செயற்படுத்துவதில் நமது திராவிட மாடல் தமிழ்நாடு அரசு எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. 2023-24ஆம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களைவிட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியிருக்கிறோம் நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு அதற்குப் பின்னால், ஒன்றிய அரசால் ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பாக, மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பேறுகாலத்தில் சத்தான உணவுக்கு ஆகும் செலவை மேற்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ஆம் ஆண்டில் 1,51,674 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.45.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. நடப்பாண்டில், முதல் மகப்பேறு மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலன்
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழினை பெறுவதற்கும், அரசின் நலத்திட்டங்களை அவர்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லவும் இந்தியா முழுமையம் செல்லுபடியாககூடிய தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் முதன்மை மருத்துவ அலுவலர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
