’இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமருக்கு மனம் இல்லை’: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
”சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது”

தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ஆம் நாள் தி.மு.கழக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் கழக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு.
மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ்காந்தியும் மாணவரணியின் துணைச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து, மாணவர்கள் - இளைஞர்கள் - இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, ‘கீழடி தமிழர் தாய்மடி‘ என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன்.