Manaparai Accident : மணப்பாறை கோர விபத்து.. 5 பேர் உடல் நசுங்கி பலி..ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!
மணப்பாறை அருகே அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் 25 பேருக்கு மேல் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,”திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி கிராமம் லெட்சம்பட்டி பிரிவு ரோடு அருகே, திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் கிராமம் தேசிய ரோடு அருகே, நெடுஞ்சாலையில் இன்று (25-6-2023) மாலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில்
காரில் பயணம் செய்த மணப்பாறை வட்டம், கே.உடையாப்பட்டியைச் சேர்ந்த திரு. முத்தமிழ்செல்வன், த/பெ.முத்துசாமி (வயது 40), திரு.ஐயப்பன், த/பெ.இரவிச்சந்திரன் (வயது 35) திரு.மணிகண்டன், த/பெ.கணேசன், மணப்பாறை வட்டம், ஆலிப்பட்டியைச் சேர்ந்த திரு.நாகரத்தினம், த/பெ.பப்பு மற்றும் தோகைமலை வட்டம், பில்லூரைச் சேர்ந்த திரு. தீனதயாளன், த/பெ.செல்வராஜ் (வயது 19) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
