சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது.. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது.. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது தருகிறது, கனடா-இந்தியா அறக்கட்டளை. இந்நிலையில் இவ்விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு, ‘CIF குளோபல் இந்தியன் விருது 2024’ வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருதினை இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் அமைப்பான ‘கனடா இந்தியா அறக்கட்டளை’ வழங்கி உள்ளது. மேலும் இதற்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு, இந்த விருதுடன் வழங்கப்படும் தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டாடும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்காக சத்குரு அவர்கள் தலைமை ஏற்று செய்து வரும் பணிகளை பாராட்டியும், விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதிலும், மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதலிலும் அவரின் ஈடுஇணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
குளோபல் இந்தியன் விருது எதற்கு?:
இதுகுறித்து கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவரான ரித்தேஷ் மாலிக் அவர்கள் கூறுகையில், ‘ சத்குரு அவர்கள் இந்த விருதினை பெற ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் அதனை டொராண்டோவில் நடைபெறும் விழாவில் நேரில் பெற்றுக் கொள்ள சம்மதித்து இருப்பது உள்ளபடியே எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம். சத்குரு மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளையும், மண் சிதைவு, காலநிலை மாற்றம் மற்றும் உணவின் தரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளையும் வழங்குகிறார்.
சத்குரு போன்ற நற்சிந்தனைத் தலைவர்களிடமிருந்து கனடா நாடு பெரிதும் பயனடையும். சத்குருவின் போதனைகள், கனடா முன்னிறுத்தும் தனிநபர்களின் நல்வாழ்வு, நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளுதல் ஆகியவைகளோடு ஒன்றிப் போகின்றன. சத்குரு யோகா, தியானம் மற்றும் தெளிவான மனநிலை போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இது குறிப்பாக மனநோய்ப் பிரச்சனைகளின் சவால்களை எதிர்கொள்ளும் கனடாவின் மருத்துவத்துறை அமைப்பின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது’ எனக் கூறியுள்ளார்.
தனக்குக் கிடைத்த விருது தொகையை அறக்கட்டளைக்கு கொடுத்த சத்குரு:
இந்த விருது வழங்கப்பட்டதற்காக சத்குரு அவர்கள் தனது நன்றியை CIF-க்கு தெரிவித்துக்கொண்டார். மேலும் விருதுடன் வழங்கப்படும் தொகையான கனடா நாட்டு மதிப்பில் CAD 50,000/-ஐ காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு கூறியுள்ளார். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.30 லட்சத்து 38ஆயிரத்து 927 ஆகும்.
இது நம் பாரதத்தின் உயிர்நாடிகளான ஆறுகள் புத்துயிர் பெறுவதற்கான ஒரு திட்ட முன் மாதிரியை உருவாக்க செயல்பட்டு வருகிறது. அதுபோல நதிகளை ஒன்றிணைப்போம் என்ற முழக்கத்தையும் வலியுறுத்துகிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதன் மூலம் காவிரி ஆற்றுக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை கணிசமாக மேம்படுத்துவது இதன் நோக்கமாக இருக்கிறது.
கனடா இந்தியா அறக்கட்டளை (CIF) என்பது கனடாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே வலுவான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்திய வம்சாவளித் தலைவர்களின் உலகளாவிய பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த CIF முக்கியப் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்