Anna University Student Issue: ‘திமுகவைச் சேர்ந்தவர் அல்ல.. திமுக அனுதாபி..’ ஞானசேகரன் பற்றி முதல்வர் விளக்கம்!
‘சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல; திமுக அனுதாபி; யாரையும் காப்பாற்ற அரசு முயலவில்லை; கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறோம்’
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, எதிர் கட்சிகள் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, அதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
‘அண்ணா பல்கலை கழகம் மாணவி விவகாரம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்த பின்னரும் குறை சொல்வது அரசியல் ஆதாயத்திற்காக தான். யார் அந்த சார் என கேட்கிறார்கள்; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றம் மூலம் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யார் அந்த சார்? முதல்வர் விளக்கம்
யார் அந்த சார்? எனக் கேட்கிறீர்கள்; உண்மையாகவே எதிர்க்கட்சியிடம் ஆதாரம் இருந்தால் புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம்; அதை விடுத்து வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.
சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல; திமுக அனுதாபி; யாரையும் காப்பாற்ற அரசு முயலவில்லை; கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறோம்,’’
என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகள் கருத்து
முன்னதாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்ற பேசிய கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தன. கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஈஸ்வரன் பேசுகையில், ‘அந்த சார்? என்பவர் ஆளுநராக இருந்தாலும், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, பேசினார். அதே போல, காங்கிரஸ் மாநில தலைவரும், சட்டமன்ற குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை பேசுகையில், ‘அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரம், அரசியலாக்கப்படுவது, மிகப் பெரிய கொடுமை’ என்று பேசினார்.
இதற்கிடையில் முதல்வரின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். முன்னதாக சபைக்கு கருப்பு சட்டையில் வந்த அவர்கள், ‘யார் அந்த சார்?’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட முககவசத்தையும் அணிந்திருந்தனர். கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது, முதல்வரின் விளக்கத்திற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் வெளிநடுப்பு செய்தனர்.