Blood Donation : இரத்த தானம் செய்திடுவோம்! மனித உயிர்களை காத்திடுவோம்!- முதல்வர்
நடப்பு ஆண்டில் தன்னார்வ இரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை : விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ இரத்த தானம் செய்திடவும் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தின் கருப்பொருள் "ஒற்றுமையுடன் இரத்த தானம் செய்வோம். ஓருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களைக் காப்போம்" என்பதாகும்.தன்னார்வ இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. அறிவியலில் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருந்தாலும் இரத்தம் என்ற அரிய திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை.