MK Stalin: ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! முதலமைச்சர் ஸ்டாலின்!
பொறுத்தவரையில், ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! அதற்காக தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கின்ற திட்டங்களை செய்கிறோம்.

சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை இல்லை, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை!
விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இட்ட பணியை தட்டாமல் செய்து முடிப்பதுதான் தன்னுடைய ஒரே வேலை என்று வாழ்ந்த ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு கழக அரசு மணிமண்டபம் அமைப்பதும், அதை நான் திறந்து வைப்பதும் எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை!
திமுக ஆட்சியின் வரலாறு!
அடுத்து, 21 சமூகநீதிப் போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமுதாய மக்கள் தங்களின் சமூகநீதி உரிமையைக் கேட்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போராடியபோது, காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 1987-ஆம் ஆண்டு இது நடந்தது. வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கைக்கு அன்றைக்கு அ.தி.மு.க. அரசு செவிமடுக்கவில்லை. 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர், “திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்வோம்; என்று வாக்குறுதி கொடுத்தார். சொன்னதுபோல், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த 43-ஆவது நாளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாறுதான் கலைஞருடைய வரலாறு! திமுக ஆட்சியின் வரலாறு!
நமக்கு நிதி ஒன்றுதான் தடையே தவிர, வேறு எந்தத் தடையும் கிடையாது!
உயிர்த் தியாகம் செய்த 21 பேர் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் கருணைத் தொகையும் மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர். இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சமூகநீதிப் போராளிகள் பட்டமும் வழங்கப்பட்டது. சமீப காலமாக நான் சுற்றுப்பயணம் செய்த மாவட்டங்களில், அதிக அறிவிப்புக்களை பெற்ற மாவட்டம் எந்த மாவட்டம் என்று கேட்டால் இந்த விழுப்புரம் மாவட்டம் தான். நமக்கு நிதி ஒன்றுதான் தடையே தவிர, வேறு எந்தத் தடையும் கிடையாது. நிதி இல்லை, நிதி இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்காமல், மக்கள் குறைகளை நீக்கிட, அதை நீக்கி, நிறைவேற்றுகின்ற அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை இல்லை, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு! அவர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. அதைப் பற்றி கவலைப்படாமல் நாம் நம்முடைய கடமையை தொடர்ந்து ஆற்றிக் கொண்டு வருகிறோம்.
தாமதமாக கிடைத்தால்தான் அதற்கு வலு அதிகம்!
இதே விழுப்புரத்தில், பொன்முடி சொன்னாரே மாநாட்டைப் பற்றி…. நான் அரசியல் அதிகம் பேச விரும்பபில்லை. ஒன்றை மாத்திரம் சுட்டிக்காட்டுகிறேன். இதே விழுப்புரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் 2004-ஆம் ஆண்டு சொன்னதை நான் இன்னும் மறக்கவில்லை… விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு முதன்முதலாக நான் தலைமை வகித்தேன். பொன்முடி சொன்னது உண்மைதான். அப்போது தலைவர் கலைஞர் பேசும்போது, எனக்கு ஒரு அறிவுரையைச் சொன்னார்! “நான் என்னுடைய 26-ஆவது வயதில் ஒரு மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு 50-ஆவது வயதில்தான் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தாமதமாக கிடைக்கக் காரணம், எதுவும் அவசரமாக, விரைவாக கிடைப்பதைவிட தாமதமாக கிடைத்தால்தான் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்கு சேர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டார் தலைவர் கலைஞர்.
பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்!
சொல்லிவிட்டு, மற்றொன்றையும் கூறினார். “எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக நினைத்து நீ நடைபோடக்கூடாது. எங்கிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ அதை தெரிந்துக்கொண்டு எல்லோரிடமும் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அணுகுமுறையை நீ கற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னார். அந்த அறிவுரையை என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறிமுறையாக கொண்டு செயல்படத் தொடங்கினேன். அதனால்தான் வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து எந்தப் பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதைவிட ’நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் என்னுடைய இலக்கு! அதற்காக தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கின்ற திட்டங்களை செய்கிறோம்.
