MK Stalin: ’நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றுகிறார்கள்’ விஜயை குறிப்பிடாமல் ஸ்டாலின் விமர்சனம்!
இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது.

நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே பேச்சு
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் திமுகவில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில், பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, ஒரு இயக்கத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த நீங்கள், அந்த இயக்கத்தினுடைய தலைமை முறையாக இல்லை, அதை நம்பிச் செல்வது நமக்கு மட்டுமல்ல, தாய்நாட்டிற்கும் அது துரோகமாக அமைந்து விடும் என்று முடிவெடுத்து, அதை உணர்ந்து, நாம் யாரிடத்திலே சென்று இருக்க வேண்டும், எங்குச் சென்று பணியாற்ற வேண்டும், எந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஒரு சிறப்பான முடிவெடுத்து, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு இணைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் இங்கே வந்திருப்பதைப் பார்த்து, நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்தது உண்டு!
உங்களை எல்லாம் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே, தலைமைக் கழகத்தின் சார்பிலே, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மறைந்தாலும் நம் உள்ளத்திலே குடியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலே, வருக... வருக... வருக... என்று வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.