CM Stalin : எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம்.. ஆளுநரின் கருத்துக்கு முதல்வர் பதிலடி!
இன்னாருக்கு இதுதான் என சொல்வது ஆரியம் எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரைக்கு வருகை தந்தார்.
இந்நிலையில் முதல் நிகழ்வாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
மதுரை - தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
