தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister M.k.stal's Speech In The Tamil Nadu Legislative Assembly Regarding Periyar's Vaikom Protest

பெரியாரின் வைக்கம் போராட்டம்! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்!

Kathiravan V HT Tamil
Mar 30, 2023 12:04 PM IST

Vaikom Satyagraha: சாதாரணமாக ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாற காரணமான போராட்டம் வைக்கம் போராட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின்

தந்தை பெரியார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தந்தை பெரியார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

மாண்புமிகு பேரவை தலைவர் அனுமதியோடு இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்ததற்கரிய நல்வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன்.

1967ஆம் ஆண்டு திமுக முதல்முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது இந்த ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை என்றார் பேரறிஞர் அண்ணா. தற்போது 6ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசும் தந்தை பெரியார் காட்டிய வழியில்தான் பயணிக்கிறது.

1924-25ஆம் ஆண்டுகளில் நடந்த வைக்கம் போராட்டம் என்பது இந்தியாவின் சமூகசீர்த்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. இந்தியாவின் கோயில் நுழைவு போராட்டங்களின் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்தது. ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமை பெற்றதில் முதற்படியாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்க கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.

1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள் கேரள தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அந்த போராட்டம். அந்த போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது. இந்த சூழலில் கேரள தலைவர்கள் அழைப்பின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியார் அவர்கள் வைக்கம் சென்று போராட்டத்திற்கு தலைமையேற்றார். வெகு மக்களிம் பரப்புரை செய்து போராட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

போராட்டக்களத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார், அருவிக்குத்து காவல் நிலையத்தில் ஒருமாதமும், திருவனந்தபுரம் சிறையில் 4 மாதமும் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியாரின் கை,கால்களில் விலங்குகள் மாட்டப்பட்டு கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இருந்து விடுக்கப்பட்டதும் மீண்டும் வைக்கம் சென்றார் பெரியார், 74 நாட்கள் சிறையிலும் 67 நாட்கள் மக்களை திரட்டி போராடினார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்த வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23ஆம் நாளில் முடிவுக்கு வந்தது.

நவம்பர் 29ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. வைக்கம் வீரர் என்று பெரியாரை பாராட்டினார் தமிழ்த்தென்றல் திருவிக. திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் தீரரை தமிழ்நாடு பாராட்டுகிறது என்று சுதேச மித்திரனில் எழுதினார் மூதறிஞர் ராஜாஜி.

போராட்டக்காரர்களுக்கும் மன்னருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திய அண்ணல் காந்தியடிகள், தந்தை பெரியாரை உடன் அழைத்து சென்றார். கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையை பெற்றுத்தந்த வெற்றிவிழாவுக்கு தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள்.

1929ஆம் அண்டு மகர் போராட்டத்தை தொடங்கிய அம்பேத்கர், தனக்கு ஊக்கம் அளித்த போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு திறப்பாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கி ஓராண்டு முழுவதும் நடத்தப்படும். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேரள் முதல்வர் பினராயி விஜயனோடு நானும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறேன்.

வைக்கம் போராட்டம் நடந்த இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம். தமிழ்நாட்டில் முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற தமிழ்நூலின் மலையாள மொழிப்பெயர்ப்பு வெளியிடப்படுகிறது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கில பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

பெரியாரை நினைவுகூறும் வகையில் பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வைக்கம் விருது செப்டம்பர் 17அன்று வழங்கப்படும்

கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை மறுசீரமைக்க 8 கோடியே 14 லட்சம் ஒதுக்கப்படும். பெரியார் சிறைவைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். வைக்கம் போராட்டத்தை நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதாரணமாக ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக மாற காரணமான போராட்டம் வைக்கம் போராட்டம் என முதலமைச்சர் பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்