Chennai Rains: ’சென்னைவாசிகளே! 2015 வெள்ளம் ஞாபகம் இருக்கா!’செம்பரம்பாக்கத்தில் இன்று செய்யப்போகும் சம்பவம்!
“Chembarambakkam Lake: இன்று காலை 9 மணி அளவில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உள்ளதாக அறிவிப்பு”
சென்னைக்கு குடிநீர் தரும் நீராதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை ஆயிரம் கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கணிசமான நீர்வரத்து இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 452 கன அடியில் இருந்து 514 கன அடியாக அதிகரித்துள்ளது.
3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடைய செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பின் அளவு 3,210 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 22.35 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முதற்கட்டமாக சுமார் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் இன்று காலை 9 மணி அளவில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2015 சென்னை வெள்ளம்
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்தது. நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை வரை தொடரந்த மழையால் தாம்பரத்தில் 49 செ.மீ, மீனம்பாக்கத்தில் 35 செ.மீ, வடசென்னையில் 29 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
இதனால் அடையாறு நதி தோன்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அடையாற்றில் கட்டப்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பாலம், சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் உள்ளிட்டவை முழுமையாக நீரில் மூழ்கின. இந்த வெள்ளதால் பலர் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.