Chennai: சாலையில் சுற்றி திரியும் மாடுகள்..சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை!
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்தால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பொதுமக்களை முட்டி காயப்படுத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. திருவல்லிக்கேணி பகுதியில் கஸ்தூரி ரங்கன் (65) என்ற முதியவரை நேற்று முன்தினம் மாடு முட்டியதில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சிப் பணியாளர்கள், திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாலையில் சுற்றி திரிந்த 16 மாடுகளைப் பிடித்து, பராமரிப்பு மையத்தில் அடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், பூக்கடை பகுதியில் 120 மாடுகள், பழைய வண்ணாரப் பேட்டையில் 3, புளியந்தோப்பில் 48, அண்ணாநகரில் 269, கொளத்தூரில் 12, கோயம்பேட்டில் 513, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்பகுதியில் 367, கீழ்ப்பாக்கத்தில் 95, அடையாறில் 177, தி-நகரில் 145 என மாநகரம் முழுவதும் 1,986 மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதாகக் கண்டறிந் திருக்கிறோம்.