Nayinar Nagendran: ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்.. நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேர் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி தரப்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பணம் கைப்பற்றப்பட்டது எப்படி?
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் எடுத்து செல்லப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையரக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்திய சோதனையில் மூன்று பேரிடம் இருந்து 3.90 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
மூன்று பேர் கைது
இதனையடுத்து 3 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
