Senthil Balaji: கைதாகியும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனா். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், " 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள ஒருவர் இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பதன் மூலம் சமூகத்துக்கு என்ன கருத்தைக் சொல்கிறீர்கள். கடை நிலை அரசு ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே, ஒரு நீதிபதிக்கு, குற்ற வழக்கில் தொடர்பிருந்தால், அவர் நீதிபதியாக தொடர முடியுமா? என தமிழக அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார். மேலும், சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் (ஜன.29) முடிவடைந்ததால், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக காணொலி வாயிலாக அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 17-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 230 நாட்களை கடந்தும் ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்