Bussy Anand: தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த்.. முதல் பேட்டி!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து புஸ்ஸி ஆனந்த் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளார்.
தன்னுடைய அரசியல் கட்சிப் பெயரை அறிவித்து நடிகர் விஜய் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் மக்கள் இயக்கம் அப்படியாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியாக மாறுகிறது. இதன்மூலம் விஜய் மக்கள் இயக்கப்பொதுச்செயலாளர், இனிமேல் தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளராக செயல்படுவார் எனத்தெரிகிறது.
மேலும், டெல்லியில் கட்சியினைப் பதிவு செய்வது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் பல்வேறு பணிகளில் தொடர்ச்சியாக சுற்றிசுழன்று ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று(பிப்ரவரி 2ஆம் தேதி) தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைப் பதிவு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தபின் வெளியில் வந்த, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’எங்கள் தலைவர் தளபதி அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியை அறிவித்துள்ளார். எங்களது தலைவர் அறிக்கையில் அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதைத் தாங்கள் பாருங்கள்'' என சுருக்கமாக குறிப்பிட்டுவிட்டு, காரில் ஏறிச் சென்றார்.
கட்சிப் பதிவு தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சிப் பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது அரசியல் கனவை வளர்த்து வந்தார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.
தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என மறைமுகமாக சமீப காலமாக சொல்லி கொண்டே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தனர். அதேபோல், திரைக்கதை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த வழியில் தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி, மறைந்த நடிகர் விஜயகாந்த், எதிர்க்கட்சி அந்தஸ்துவரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9