Tamizhaga Vetri Kazhagam: ’ஐயோ இதெல்லாம் வதந்தி! நம்பாதீங்க!’ புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு ட்வீட்!
“Tamizhaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்”
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இக்கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை தேர்வு செய்து நியமனம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக நேற்றைய தினம் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது தொடர்பான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.