Accident: சென்னை பறக்கும் ரயில் திட்டம் - பாரம் தாங்காமல் கீழே விழுந்த பாலம்! பெரும் விபத்து தவிர்ப்பு
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. தில்லை கங்கா நகர் பகுதியில் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் பாலம் பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
சென்னை புறநகருக்கு ரயில் தடமாக பறக்கும் ரயில் இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக இருந்து வரும் இந்த பறக்கும் ரயில் தடத்தின் சேவை தற்போது சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இருந்து வருகிறது.
இந்த ரயில் தடத்தின் அடுத்த கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான இணைப்பு பணிகள் கடந்த 2008இல் தொடங்கப்பட்டது. ரூ. 495 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பணிகள் நீண்ட நாள்களாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்த பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், பரங்கிமலை அருகே தில்லை கங்கா நகர் பகுதியில் பாலம் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வேளச்சேரி - பரங்கிமலை இடையே மொத்தம் 4.5 கிமீ தூரத்துக்கு, 167 தூண்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதையடுத்து ஜனவரி 18 மாலையில் இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த ரயில் பாலம் யாரும் எதிர்பார்திராத நிலையில் பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது.
இந்த விபத்து நிகழ்ந்தபோது பணியாளர்கல் யாரும் அங்கு இல்லாத காரணத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆதம்பாக்கம் போலீசார், ரயில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
பாலம் சரிந்து விழுந்தபோது பலத்து சத்தம் கேட்டதோடு, அந்த பகுதி கொஞ்ச நேரம் புழுதி பறந்தது. இந்த சம்பவத்தால் அருகில் வசித்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பாலம் சரிந்து விழுந்த காரணத்தால் அந்த பகுதியில் சில மண நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
முன்னதாக, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஆனதால் பறக்கும் ரயில் திட்டம் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் காரணமாக அதன் மதிப்பீடும் அதிகரித்தது.
புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளில் பறக்கம் ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு ரயில் சிக்னல் கட்டமைப்புகளும் செய்து முடிக்கப்பட்டன. இதன் பின்னர் நீதிமன்றம் மூலம் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்ற வந்தது. இந்த விபத்து காரணமாக தற்போது பரபரப்பு நிலவியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்