Annamalai: பாஜக கள்ளுக்கடைகளை கண்டிப்பாக திறக்கும்! - பாதயாத்திரையில் அண்ணாமலை உறுதி!
வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் உங்களை எப்படிப் பார்த்துக் கொள்வார்களோ, அதே போல உங்களிடம் பத்து பனை மரங்கள் இருந்தால் அதுவே உங்களை பார்த்துக் கொள்ளும். அந்த அளவுக்கு அதில் வருமானம் வரும்.
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர் நேற்றைய தினம் கரூர் அரவக்குறிச்சி பகுதி மக்களை சந்தித்து அவர்கள் முன் பேசினார்.
அவர் பேசும் போது, “ டாஸ்மாக் கடைகளின் மூலம் 44 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் போது கள்ளுக்கடைகளை கண்டிப்பாக திறக்கும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறோம்.
வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் உங்களை எப்படிப் பார்த்துக் கொள்வார்களோ, அதே போல உங்களிடம் பத்து பனை மரங்கள் இருந்தால் அதுவே உங்களை பார்த்துக் கொள்ளும். அந்த அளவுக்கு அதில் வருமானம் வரும்.
டி ஆர் பாலு, ஜெகத்ரட்சகன் ஆகிய சாராய வியாபாரிகள் விற்கக்கூடிய சரக்குகளை வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகள் தேவைப்படுகின்றன. 44 சதவீத கொள்முதல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து அங்கு செல்கின்றன. சூழ்நிலை இப்படி இருக்கும் போது கள்ளுக்கடைகளை திறந்தால் என்ன தவறு.
பாலாஜிக்கு 260 நாட்களாக அரசு வரிப்பணத்தில் இருந்து சம்பளம் போய்க் கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்னர் தான் அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்படியாவது பெயில் கிடைக்குமா என்று எதிர்பார்த்தார்.
அவரது சகோதரர் 280 நாட்களாக தலைமறைவாக இருக்கிறார். சாதாரண பிக் பாக்கெட் அடிப்பவனை கூட நம்முடைய காவலர்கள் மிக சீக்கிரமாக பிடித்து விடுகிறார்கள்.
280 நாட்களாக செந்தில் பாலாஜியின் சகோதரரை நம்முடைய காவல்துறை பிடிக்கவில்லை என்பது காவல்துறைக்கு தலைகுனிவா இல்லை ஊழல்வாதிகளுக்கு காவல்துறை ஒத்துழைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அதை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஜனநாயகத்தையும் ஊழலையும் பிரிக்க முடியாது. திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன. ஒருவர் ஜெயிலில் இருக்கிறார் இன்னொருவர் ஜெயிலுக்கு செல்ல தயாராக இருக்கிறார் இன்னும் ஐந்து அமைச்சர்களுக்கு தீர்ப்பு வர வேண்டி இருக்கிறது. மோடி மிக நேர்மையானவர் மட்டுமல்ல, தன்னை சுற்றி நேர்மையானவர்களை வைத்துக்கொள்பவர்” என்று பேசினார்.
டாபிக்ஸ்