Annamalai About TTV: ’டிடிவி தினகரனின் விருப்பம் நிறைவேறும்’ ட்விஸ்ட் வைத்து பேசிய அண்ணாமலை!
“அண்ணன் டிடிவி தினகரன் அற்புதமான மனிதர் என்பதை பழகி பார்த்த எங்கள் அனைவருக்கும் தெரியும். நிச்சயம் நீங்கள் நினைக்க கூடிய மாற்றங்கள் வரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு”

டிடிவி தினகரன் அவர்கள் நினைக்க கூடிய மாற்றங்கள் வரும் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரனை வரவேற்கிறேன். நேற்றைய தினம் அண்ணன் ஹாஸ்பிட்டல் சென்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். ’தம்பி நான் ஹாஸ்பிட்டல் போறேன், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட அப்பாயிண்ட்மண்ட்’ என்று இரண்டு நாட்கள் முன் சொன்னார்கள். அண்ணனின் இதயம் நல்ல இதயம் என்பது மக்களுக்கு தெரிந்து உள்ளது. அதற்காக சந்தோஷப்படுகிறேன். அதை நாங்கள் சொன்னால் மக்கள் ஏற்பார்களோ இல்லையொ, அப்போலோ டாக்டர் சான்று கொடுத்து உள்ளார்” என டிடிவி தினகரனை புகழ்ந்தார்.
மேலும் “அண்ணன் டிடிவி தினகரன் அற்புதமான மனிதர் என்பதை பழகி பார்த்த எங்கள் அனைவருக்கும் தெரியும். நிச்சயம் நீங்கள் நினைக்க கூடிய மாற்றங்கள் வரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு” என்றும் அண்ணமலை தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து அரசியல் விவாதத்தை கிளப்பும் வகையில் உள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் “எடப்பாடி பழனிசாமியை நீக்கம் செய்துவிட்டு அதிமுக பாஜக கூட்டணியில் இணையும்” என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்றையதினம் ஈபிஎஸ் முன்னிலையிலேயே அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு அரசியல் விவாதங்களை கிளப்பி உள்ளது.
