Annamalai vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai Vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ It ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!

Annamalai vs Senthil Balaji: ’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!

Kathiravan V HT Tamil
Dec 24, 2024 06:22 PM IST

வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டச்சத்திரம் அருகே ஒருநபரின் இல்லத்தில் சோதனை செய்து உள்ளனர். அவர் எனது தூரத்து உறவினர்தான். எங்கள் சொந்தக்காரங்களுக்கு அவரது குடும்பத்தில் இருந்து பெண் எடுத்து உள்ளோம் என அண்ணாமலை விளக்கம்

’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!
’நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்!’ IT ரெய்டு குறித்த கேள்விக்கு அண்ணாமலை வினோத பதில்!

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மைத்துனர் மற்றும் சத்திரப்பட்டியில் வசிக்கும் செந்தில் குமார் என்பவருடன் இணைந்து வணிகம் செய்வதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் உள்ள செந்தில் குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

திருச்சி சூர்யா சிவா எழுப்பிய கேள்வி

இது தொடர்பாக பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா, அண்ணாமலைக்கு 6 கேள்விகள் என்று தனது ‘எக்ஸ்’ தளத்தில் கேள்விகளை எழுப்பி இருந்தார். 

அதில், தான் மட்டுமே யோக்கியமான அரசியல்வாதி என்ற நினைப்பில் எல்லாரையும் கேள்வி கேட்கும் நீங்கள் நான் கேட்கும் ஆறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா ?

  •  மத்திய அரசின் வருமானவரித்துறை கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்திய திண்டுக்கல் சத்திரபட்டி செந்தில்குமாருக்கும் உங்களுக்கும் என்ன உறவு? உங்களுடைய அத்தை மகனின் மச்சானா அவர்?
  • கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு,கர்நாடகா என பல நூறு கோடி முதலீடு சட்டவிரோதமாக நடந்துள்ளது என வருமான வரித்துறை சொல்வது உண்மையா? இது நீங்கள் கொள்ளையடித்த பணமா?
  • உங்கள் உடன்பிறந்த அக்காவின் கணவர் (மச்சான்) சிவக்குமார் அவர்களும் சத்திரபட்டி செந்தில்குமாருடன் இணைந்து பழனி புளியம்பட்டியில் *அண்ணாமலையார் சேம்பர் பிரிக்ஸ்* என பல ஏக்கரில் தொழில் நடத்துவது உண்மையா ?
  • பல ஆண்டுகளாக கோடி கணக்கில் செங்கல் தொழில் செய்து வந்த பெரிய முதலாளிகளே செம்மண் தட்டுபாட்டினால் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டனர், உங்கள் மச்சானுக்கு மட்டும் எஸ்.ஆர் மைன்ஸில் இருந்து இலவசமாக செம்மண் எப்படி அளவில்லாமல் கிடைக்கிறது?
  • உங்களோட மச்சான் சிவக்குமார் அவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி அவருடைய தொகுதியில் செங்கல் சூளை அமைத்து கொடுத்து, அரசு டெண்டர்கள் வழங்கி தொழில் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறாரே சமுதாய பிரியத்திலா? அல்லது ஊழல் வழக்கில் மத்திய அரசு கைது செய்யும் என்ற பயத்திலா ? இதனால் தான் திமுகவில் இருக்கும் மற்ற அமைச்சர்களை விமர்சனம் செய்யும் நீங்கள் அமைச்சர் சக்கரபாணியை பற்றி விமர்சனம் செய்வதில்லை?
  • ஊரில் உள்ள எல்லாரையும் *ரைடு அனுப்புவேன்* என மிரட்டும் உங்கள் வீட்டிற்கே ரைடு அனுப்பியது யார்? கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை மச்சான் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா? பாஜக ஆட்சியில் ஒரு மாநில தலைவரின் உறவினர் (மச்சான்) வீட்டிலேயே ஐடி ரெய்டு நடப்பது இதுதான் முதல்முறையாமே? உங்களை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டித்தான் இந்த ரெய்டா? ⁠ராஜினாமா செய்யாவிட்டால் அடுத்தது உங்கள் மாமனார் சுவாமிநாதன் வீட்டுக்கும், நண்பர்கள் சி.ஆர் சிவக்குமார் நாயர், திருநாவுக்கரசு, ஆதித்யா முத்துசாமி வீட்டிற்கும் ரெய்டு வர போகுதாமே?

விக்கிரமாதித்தன் வேதாளம் போல என்னுடைய கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை என கேள்வி எழுப்பி இருந்தார். 

ஐ.டி.ரெடு தொடர்பாக அண்ணாமலை விளக்கம்

பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டச்சத்திரம் அருகே ஒருநபரின் இல்லத்தில் சோதனை செய்து உள்ளனர். அவர் எனது தூரத்து உறவினர்தான். எங்கள் சொந்தக்காரங்களுக்கு அவரது குடும்பத்தில் இருந்து பெண் எடுத்து உள்ளோம். உதாரணமாக நானும் செந்தில் பாலாஜியும் உறவினர்கள்தான். நானும் செந்தில் பாலாஜியும் ஒரே கோயிலுக்கு செல்கிறோம். நானும் ஜோதிமணி அக்காவும் உறவினர்கள், நானும் சக்ரபாணி அண்ணும் உறவினர்கள், நானும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எனது உறவினர்தான். இதை ஒரு லாஜிக்காக எடுத்து அரசியல் பேசினால் எல்லோருமே உறவினர்கள்தான் என்று வரும். ரெய்டு நடந்தது என்னுடைய குடும்பமா?, ரத்த சொந்தமா? என்றால் நீங்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. கோவையில் வருமானவரித்துறை சென்ற ஆண்டு செய்த சோதனையில் எனக்கு பாதிப்பேர் உறவினர்கள்தான். இதுவரை வருமானவரித்துறைக்கு நான் போன் செய்ததே இல்லை. நான் வருமானவரித்துறைக்கு போன் செய்து ‘அவர் எனது உறவினர் அங்கு செல்லாதீர்கள்’ என்றா சொல்ல முடியும். அரசியலில் வருவதற்கு முன் செந்தில் பாலாஜி எனது வீட்டில் என்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவுசாப்பிட்டு சென்று உள்ளார். ஆனால் அதற்காக நான் தயவு தாட்சணை பார்ப்பது இல்லை” என கூறி உள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.