Annamalai: ’1700 கி.மீ கால்நடையாக செல்வோம்’ என் மண் என் மக்கள் யாத்திரை குறித்து அண்ணாமலை பேட்டி
“6 அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க உள்ளோம்”
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியவை:-
நாளை ராமேஸ்வரத்தில் பாஜகவின் என் மன் எண் மக்கள் யாத்திரை மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் அமித்ஷா முக்கிய விருந்தினராக பங்கேற்கிறார்.
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்த யாத்திரை 234 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளது. நாளை தொடங்கும் யாத்திரை முதற் கட்டமாக ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை பொன்னார் தலைமையில் நடைபெறும்.
ஒவ்வொரு பகுதியிலும் மூத்த தலைவர்கள் 5 கட்டங்களாக வழிநடத்துவர். மக்கள் உள்ள பகுதிகளில் கால்நடையாக பாஜக தொண்டர்கள் செல்வார்கள். கால்நடையாக 1700 கி.மீ செல்வோம், 900 கி.மீ பேருந்து மூலம் செல்வோம். வரும் ஜனவரி 20ஆம் தேதிக்கு முன்பு முடிக்க இதை திட்டமிட்டுள்ளோம்.
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் அழைத்துள்ளோம். பாஜகவின் யாத்திரை என்று சொல்வதைவிட 2024ஆம் ஆண்டு மோடிஜி அவர்கள் வர மக்கள் ஆதரவு வேண்டும், பாஜக சாதனைகளை விளக்கி யாத்திரையில் பேச உள்ளோம்.
சில கட்சித் தலைவர்கள் தொடக்க விழாவுக்கு வருகிறார்கள். சில தலைவர்கள் அவர்களின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறார்கள், மேலும் சில தலைவர்கள் வேறு வேறு நாட்களில் கலந்து கொள்வார்கள். 10 பொதுக்கூட்டங்களில் கேபினட் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள்.
என்.எல்.சி நிலத்தை கையகப்படுத்துவதற்காக விளைந்த பயிர்கள் மீது ஜேசிபி ஏற்றுவதை ஏற்று கொள்ள முடியாது. இது குறித்து என்.எல்.சி நிர்வாகத்திடம் பேசி உள்ளோம்.
ஆளுநரிடம் 6 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். நாம் கொடுத்துள்ள புகார்கள் அனைத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க உள்ளோம். பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊழல் இல்லாத தமிழ்நாடாக இது மாறும் என்பது எனது நம்பிக்கை
டாபிக்ஸ்