Tamil News  /  Tamilnadu  /  Bjp State President Annamalai Accuses Dmk Mla Karunanidhi's Son Of Torturing Home Worker

Annamalai: ‘தலித் பெண்ணை சித்ரவதை செய்தாரா திமுக எம்.எல்.ஏவின் மகன்?’ அண்ணாமலை பரபரப்பு புகார்

Kathiravan V HT Tamil
Jan 18, 2024 03:01 PM IST

”வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது”

திமுக எம்,எல்,ஏவின் மகன் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக எம்,எல்,ஏவின் மகன் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

DMK Files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல் மற்றும் அதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன் வைத்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று முதல் கட்ட DMK Files என்ற பெயரில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கலைஞர் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களின் சொத்து மதிப்புகள் குறித்த பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை வெளியிட்டார்.

’என் மண் என் மக்கள்’ சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக திமுகவினர் மீதான ஊழல் புகார்களை DMK Files - 2 என்ற பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அளித்து இருந்தார்.

நேற்றைய தினம் DMK Files - 3 என்ற பெயரில் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் நிறுவனம் குறித்து ஆ.ராசா முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர் சேட்டிடம் பேசும் ஆடியோவை வெளியிட்டு இந்தார்.

இந்த சர்ச்சை ஒய்வதற்குள் மேலும் ஒரு புகாரை திமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வைத்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்