’மதுரை வரும் அமித்ஷா செய்யப்போவது என்ன?’ நயினார் நாகேந்திரன் பேட்டி
”திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை சாடியதற்கு பதிலளித்த நயினார், பாஜக யாரையும் சாடுவதற்காக கட்சி நடத்தவில்லை என்றும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் குறைபாடுகளையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பதே தங்கள் நோக்கம் எனவும் கூறினார்”

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உருவாக மதுரை சிறந்த இடம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் நடைபெறவுள்ள கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரவு மதுரை விமானம் மூலம் வருகிறார். அவர் மறுநாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த பின்னர், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசவுள்ளார். பின்னர், மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மதுரையை தேர்வு செய்தது ஏன்?
மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அங்கு கட்சியை ஆரம்பித்ததாலும், மதுரை மீனாட்சி ஆட்சி செய்யும் புண்ணிய பூமியாக இருப்பதாலும், தேசிய ஜனநாயக ஆட்சி உருவாக இது உகந்த இடம் எனவும் நயினார் தெரிவித்தார்.