’ஞானசேகரனை போலவே அரக்கோணம் வழக்கிலும் நீதி வேண்டும்’ நயினார் நாகேந்திரன்!
”அரக்கோணம் வழக்கில் இன்னும் FIR கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன்? இதற்கான விளக்கத்தையும் மக்கள் மன்றத்தில் முதல்வர் சமர்ப்பிக்க வேண்டும்”

ஞானசேகரன் வழக்கை போலவே, திமுக ஆட்சியில் எஞ்சியுள்ள பாலியல் வழக்குகளுக்கு நீதி வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்நமது தமிழக பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் முன்னெடுத்த அறப்போராட்டங்களின் விளைவாகவும், நாம் கொடுத்த அழுத்தங்களுக்கு பதிலாகவும் அண்ணா பல்கலைக் கழக கொடூரச் சம்பவத்தின் நேரடிக் குற்றவாளி ஞானசேகரன் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, இன்று 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மகளிர் நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
ஆனால் அதே சமயம் இந்த வழக்கில் மறைமுகத் தொடர்புடைய அந்த “சார்” யார் என்ற கேள்வியும், ஒருவேளை திமுக-வில் உள்ள முக்கியஸ்தர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுப்பெற்றுள்ளது.