’குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்’ அண்ணாமலை ஆவேச பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்’ அண்ணாமலை ஆவேச பேச்சு!

’குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்’ அண்ணாமலை ஆவேச பேச்சு!

Kathiravan V HT Tamil
Published Jun 23, 2025 09:30 AM IST

”பணம் உள்ளவர்களுக்கு ஒரு நியாயம், பணம் இல்லாதவர்களுக்கு ஒரு நியாயம். இதை மாற்ற வேண்டும். ஆன்மீகத்தை முன்வைத்து ஆட்சி நடக்க வேண்டும்”

’குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்’ அண்ணாமலை ஆவேச பேச்சு!
’குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்’ அண்ணாமலை ஆவேச பேச்சு!

இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருகன் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். மூத்த உறுப்பினர்கள், ஆன்மீகவாதிகள் பங்கேற்றனர்.

இந்து சமுதாயத்தின் குரல்

இந்த மாநாட்டில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,"நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இந்த மண்ணில் இந்து மதத்திற்காக உயிர் தியாகம் செய்த தானுலிங்க நாடார், ராமகோபாலன், ராஜகோபால், ஆடிட்டர் ரமேஷ், சசிகுமார் உள்ளிட்ட தலைவர்களின் கண்ணீர் துளிகள் இந்த மாநாட்டில் பிரதிபலிக்கின்றன," என்று அண்ணாமலை பேசினார். இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்த அவர், "இது ஒரு சாதாரண கூட்டமல்ல; இந்து சமுதாயத்தின் குரலை உரக்க ஒலிக்கச் செய்யும் எழுச்சி மாநாடு," என்றார்.

இந்து மதத்தின் சவால்கள்

உலகளவில் 120 கோடி இந்துக்கள் உள்ளனர், ஆனால் வெறும் இரண்டு நாடுகளில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, கிறிஸ்தவ மதத்தை 230 கோடி பேர் (120 நாடுகளில் பெரும்பான்மை), இஸ்லாமிய மதத்தை 200 கோடி பேர் (53 நாடுகளில் பெரும்பான்மை), மற்றும் 190 கோடி பேர் எந்த மதத்தையும் பின்பற்றாமல் உள்ளனர் என்று ஒப்பிட்டார். "இஸ்ரேல் 0.2% மக்கள் தொகையுடன் தனது வாழ்வியல் முறையைப் பாதுகாக்க நான்கு நாடுகளுடன் போராடுகிறது. அமெரிக்கா 37 மணி நேரம் தரையில் இறங்காமல் பறந்து தாக்குதல் நடத்துகிறது. ஆனால், இந்தியாவில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தினால் சிலருக்கு பிரச்சனை," என்று அவர் விமர்சித்தார்.

"ஏப்ரல் 22 அன்று பெகல்காமில் இந்து மதத்தைப் பின்பற்றியதற்காக 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்கும்போது மட்டும் சிலருக்கு ஆட்சேபனை," என்று குறிப்பிட்ட அவர், இந்து சமுதாயம் தனது உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முருகர் மாநாட்டின் நோக்கம்

முருகப் பெருமானை மையமாக வைத்து நடைபெற்ற இந்த மாநாடு, இந்து மதத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், அரசியல் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக கேள்வி எழுப்பவும் ஒரு தளமாக அமைந்தது. "நமது கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நமது குழந்தைகள் தைரியமாக திருநீறு, ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். ஆனால், இன்று இவை பிரச்சனையாக உள்ளன," என்று அண்ணாமலை கவலை தெரிவித்தார்.

"ஐந்து லட்சம் பேர் மதுரையில் கொள்கைக்காக, மழை பெய்யும் என்று தெரிந்தும் ஒன்றுகூடியுள்ளனர். இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி," என்று அவர் கூறினார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், "திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை செய்தால், ஒவ்வொரு வீடாகச் சென்று சூரசம்ஹாரம் செய்து, திருத்தணியில் அமைதியாக இருப்போம்," என்று உருவகமாகப் பேசினார்.

கந்த சஷ்டி கவசத்தின் முக்கியத்துவம்

கந்த சஷ்டி கவசத்தின் ஆன்மீக மற்றும் அறிவியல் முக்கியத்துவத்தை விளக்கிய அண்ணாமலை, "இது வெறும் பக்திப் பாடல் அல்ல; ஒரு மந்திர நூல். தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழே உள்ள 'நாபி கமலம்' பகுதியைப் பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்டது. இதில் விஞ்ஞானமும், ஆன்மீகமும் கலந்துள்ளன," என்றார். "தமிழ், ஆன்மீகம், இலக்கியம் ஒருங்கிணைந்து நமது வாழ்வியல் முறையை உருவாக்கியுள்ளது. இவற்றைப் பிரிக்க முடியாது," என்று அவர் வலியுறுத்தினார்.

கோவில்களும், ஆன்மீகமும்

தமிழகத்தில் 44,000 கோவில்கள் உள்ளன; 5.25 லட்சம் ஏக்கர் நிலம் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இவை ஒழுங்காக நிர்வகிக்கப்படுவதில்லை என்று விமர்சித்த அண்ணாமலை, "பணம் உள்ளவர்களுக்கு ஒரு நியாயம், பணம் இல்லாதவர்களுக்கு ஒரு நியாயம். இதை மாற்ற வேண்டும். ஆன்மீகத்தை முன்வைத்து ஆட்சி நடக்க வேண்டும்," என்றார்.

கோவில்களைச் சார்ந்த நகரங்கள் செழிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "மதுரை, காசி, உஜ்ஜயினி போன்ற நகரங்கள் ஆன்மீகத்தால் செழித்து விளங்குகின்றன. திருப்பதி கோவில் மட்டும் 2.47 லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளது. ஆன்மீகம் சார்ந்த பொருளாதாரம், வாழ்வியல் நெறி வந்தால் மட்டுமே முருகன் நிம்மதியாக இருப்பார்; நாமும் நிம்மதியாக இருப்போம்," என்றார்.

அரசியல் மற்றும் எதிர்காலம்

அரசியல்வாதிகள் இந்து மதத்தை அவமதிக்கும் போக்கை விமர்சித்த அண்ணாமலை, "2026 தேர்தலில் ஓட்டுக்காக கோவிலுக்கு வருவார்கள். ஆனால், இந்து மத அடையாளங்களை அழித்துவிட்டு புகைப்படம் எடுப்பவர்களை இந்துக்கள் உணர வேண்டும். நாம் யாருக்கும் எதிரி இல்லை; ஆனால், நம்மை எதிரியாக நினைப்பவர்களுக்கு நாம் எதிரி," என்றார்.