BJP: ’பாஜக மாநிலத் தலைவர் பதவியை கேட்டும் கொடுக்கவில்லையா?’ வானதி சீனிவாசன் ஓபன் டாக்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp: ’பாஜக மாநிலத் தலைவர் பதவியை கேட்டும் கொடுக்கவில்லையா?’ வானதி சீனிவாசன் ஓபன் டாக்!

BJP: ’பாஜக மாநிலத் தலைவர் பதவியை கேட்டும் கொடுக்கவில்லையா?’ வானதி சீனிவாசன் ஓபன் டாக்!

Kathiravan V HT Tamil
Published Apr 14, 2025 03:00 PM IST

“இதுவரை இந்த கட்சியில் எந்த பொறுப்பு வேண்டும் என்று நான் கேட்டதே இல்லை” என்று கூறினார். “கட்சி பணி செய்வோம், எந்த நேரத்தில் எந்த பொறுப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று கட்சி நினைக்கிறதோ, அந்த பொறுப்பை கொடுக்கும்”

BJP: ’பாஜக மாநிலத் தலைவர் பதவியை கேட்டும் கொடுக்கவில்லையா?’ வானதி சீனிவாசன் ஓபன் டாக்!
BJP: ’பாஜக மாநிலத் தலைவர் பதவியை கேட்டும் கொடுக்கவில்லையா?’ வானதி சீனிவாசன் ஓபன் டாக்!

வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு:-

நயினார் நாகேந்திரனின் பொறுப்பு

புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் குறித்து பேசிய வானதி, “திரு. நயினார் நாகேந்திரன் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பங்களித்தவர்” என்று பாராட்டினார். “அவருடைய தலைமை புதிய நபர்களை கட்சிக்கு கொண்டு வரும், புதிய விஷயங்கள் கட்சிக்கு கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 “கட்சியின் விரிவாக்கத்திற்கு அவர் பொறுப்பேற்றது ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கிறோம்” என்று தெரிவித்தார். “கோடிக்கணக்கான தொண்டர்கள் அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறார்கள், அவர் எங்களை நல்ல முறையில் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது” என்று உறுதியளித்தார்.

முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பங்களிப்பு

முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய வானதி, “திரு. அண்ணாமலை மிகச் சிறப்பாக செயல்பட்டார். தேர்தல் அரசியலிலும், கட்சி வேலைகளிலும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர்” என்று புகழ்ந்தார். “தன்னுடைய பொறுப்பில் இருந்து இன்று அவர் அடுத்த மாநில தலைவருக்கு பொறுப்பை மாற்றியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

புதிய மற்றும் முன்னாள் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு இடையேயான வித்தியாசம் குறித்த கேள்விக்கு, “பதவி ஏற்று 24 மணி நேரம்தான் ஆகிறது, இப்போதே ஒப்பிடுவது முதல் குழந்தையையும் இரண்டாவது குழந்தையையும் ஒப்பிடுவது போல” என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

பாஜகவின் ஜனநாயக முறை

பாஜகவின் தலைவர் தேர்வு முறை குறித்து விளக்கிய வானதி, “இந்த கட்சி ஒரு ஜனநாயக ரீதியாக இயங்குகிற கட்சி” என்று தெளிவுபடுத்தினார். “மற்ற கட்சிகளைப் பார்த்தால், அடுத்த தலைவர் யாரென்று இப்போதே சொல்லிவிடுவார்கள். ஆனால், எங்கள் கட்சி அப்படியல்ல, தலைவருக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் கட்சி இல்லை” என்று கூறினார்.

மாநிலத் தலைவர் வாய்ப்பு மறுப்பா?

நீங்கள் மாணவர் காலத்தில் இருந்து கட்சியில் உள்ளீர்கள், ஆனால் நயினார் நாகேந்திரன் கட்சிக்கு வந்து 8 ஆண்டுகளிலும், அண்ணாமலை கட்சிக்கு வந்து 2 ஆண்டுகளிலும் மாநில தலைவராக ஆக்கப்பட்டுவிட்டார்களே? என்ற கேள்விக்கு

“இந்த கட்சியில் தேசிய தலைவராகவே ஆக்கி என்னை ஆக்கி இருக்கிறார்கள். அது உங்கள் பார்வைக்கு படவில்லை. முதல் முறையாக தென்னிந்தியாவில் இருந்து, ஹிந்தி தெரியாத ஒரு பெண்மணியை, தமிழகத்தைச் சார்ந்த பெண்மணியை, பிரதமர் மோடி அவர்கள் தேசிய அளவில் பொறுப்பு கொடுத்து இருக்கிறார்கள். இது பெரிய பொறுப்பு இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “மத்திய தேர்தல் குழுவில் மூத்த தலைவர்களுடன் எனக்கும் இடம் கொடுத்து அழகு பார்த்திருக்கிறது பாஜக” என்று பெருமையுடன் தெரிவித்தார். “நான் மட்டுமல்ல, 25-30 ஆண்டுகள் உழைத்த பலர் இந்த கட்சியில் இருக்கிறார்கள். வாய்ப்புகளை தவறவிட்டோம் என்று நினைக்கவே இல்லை” என்று உறுதியாக கூறினார்.

மாநில தலைவர் பதவி குறித்த எண்ணம்

மாநில தலைவர் பதவி குறித்து தனக்கு எவ்வித ஆசையும் இல்லை என்று தெளிவுபடுத்திய வானதி, “இதுவரை இந்த கட்சியில் எந்த பொறுப்பு வேண்டும் என்று நான் கேட்டதே இல்லை” என்று கூறினார். “கட்சி பணி செய்வோம், எந்த நேரத்தில் எந்த பொறுப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று கட்சி நினைக்கிறதோ, அந்த பொறுப்பை கொடுக்கும்” என்று தனது அணுகுமுறையை விளக்கினார்.

“நீங்கள் சொல்வது போல, வாய்ப்பை தவறவிட்டோம், ஏமாற்றம் என்று எதுவும் எனக்கு கிடையாது. கட்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது, அதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

கட்சியின் பயணம்: தியாகமும் பெருமையும்

தனது அரசியல் பயணத்தை பகிர்ந்து கொண்ட வானதி, “1987ல் நான் ஏபிபிபி மாணவர் அமைப்பில் சேர்ந்தபோது, எங்கள் அமைப்பின் பெயரை வெளியில் சொன்னால் கூட உச்சரிக்க சிரமப்படுவார்கள்” என்று நினைவு கூர்ந்தார். “அன்றைக்கு இந்த கட்சி ஆளுங்கட்சியாக வரும் என்று எங்களுக்கே தெரியாது” என்று கூறினார்.

“இன்று இருக்கும் எத்தனையோ பேர் ஜெயிலுக்கு சென்றவர்கள், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள். எதையும் எதிர்பார்க்காமல், ‘நேஷன் ஃபர்ஸ்ட், பின்பு கட்சி, பின்பு தனிமனிதர்’ என்று இந்த கட்சி எங்களை பழக்கப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜகவின் இலக்கு

தமிழகத்தில் பாஜகவின் இலக்கு குறித்து பேசிய வானதி, “பாஜக தமிழகத்தில் வளர வேண்டும், ஆளும் கட்சியாக உயர வேண்டும் என்பதற்காக இத்தனை பேரும் உழைத்து வருகிறோம்” என்று வலியுறுத்தினார். “இந்த தொகுதி மக்களுக்கு உழைத்ததற்கு, அவர்கள் என்னை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அழகு பார்த்திருக்கிறார்கள்” என்று நன்றி தெரிவித்தார்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.