Nainar Nagendran: "ரெய்டு நடத்தி கூட்டணி அமைக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை".. ஓப்பனாக பேசிய நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran: கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran: திருநெல்வேலியில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தனியாருக்கு குத்தகை விடுவதை அனுமதிக்க முடியாது. அரசு செய்யும் அனைத்து நல்ல திட்டங்களையும் நாங்கள் ஆதரிப்போம். நாங்கள் எதிரி கட்சி அல்ல.. எதிர்க்கட்சி தான். தமிழகத்தில் கடன் கட்டுக்குள்தான் இருக்கிறது என மூன்று மாதங்களுக்கு பின்னர் தமிழக அரசால் சொல்ல முடியுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"2026 தேர்தலில் எதிரொலிக்கும்"
2026 தேர்தலில் அரசின் கட்டண உயர்வு, வரி வசூல் பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் கட்டாயம் எதிரொலிக்கும். எனது தொகுதியில் மக்களுக்கான பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் கேட்டால் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தின் மக்களின் பிரச்சினைகள் முழுவதுமாக நிறைவேறியதா? என்றால் அது இல்லை.
எடப்பாடி பழனிசாமியிடம் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்
கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். வருமான வரித்துறை ரெய்டுக்கும் கூட்டணிக்கும் சம்மந்தம் இல்லை. திமுக தரப்பிலும் ரெய்டு நடக்கிறது. பணம் எங்கெல்லாம் இருக்கிறது என்று வருமான வரித்துறை சந்தேகப்படுகிறதோ, அங்கெல்லாம் ரெய்டு நடக்கும். ரெய்டு மூலம் மிரட்டி கூட்டணிக்கு பணிய வைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணியா?
சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 55-வது ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, அதிமுகவும் பாஜக கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த உறுதி தற்போதைய அதிமுக தலைமையிடம் இல்லை எனவும் 2021 ஆம் ஆண்டு கிடைத்த பெரிய வாய்ப்பை, எடப்பாடி பழனிசாமி தவறவிட்டுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த சூழலில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பேட்டியின் மூலம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பு உள்ளதா? என்ற எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.
