’முடிவுக்கு வருகிறதா அண்ணாமலையின் ஆட்டம்! பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் யார்?' டெல்லி தலைமையில் பலே ஸ்கெட்ச்!
அதிமுகவில் இருந்து வந்த பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அல்லது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தலைவராக நியமிக்க தேசியத் தலைமை ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
அடுத்து வரவுள்ள 2026 சட்டமன்றத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழக பாஜக தலைமையில் சில முக்கிய மாற்றங்களை செய்ய பாஜக தேசியத் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜகவின் உட்கட்சித் தேர்தல்
தேசிய கட்சியான பாஜகவை பொறுத்தவரை மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் முதல் வார்டு வரை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகின்றன.
தமிழ்நாடு பாஜகவை பொறூத்தவரை மண்டல அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடைபெற்று முடிந்து உள்ளது. இந்த நிலையில் புதிய பாஜக மாநிலத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை பாஜக தேசியத் தலைமை நியமனம் செய்து உள்ளது. ஏற்கெனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பொறுப்பாளராக கிஷன் ரெட்டி இருந்தார். இன்னும் சில நாட்களில் அவர் தமிழகம் வருவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
முடிந்து போன அண்ணாமலையின் பதவிக்காலம்
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி. சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வென்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோற்ற நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முதல் அக்கட்சித் மாநிலத் தலைவராக அவர் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அப்பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவை வீழ்த்த கூட்டணி அவசியமா?
தமிழ்நாட்டை ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியே பெரும் வெற்றிகளை பதிவு செய்து உள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக பாஜக தேசியத் தலைமை கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்து உள்ள நிலையில், வலுவான கூட்டணியில் போட்டியிடும் போது பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்பது அக்கட்சியின் திட்டம் என கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
நயினாரா? வானதியா?
கடந்த காலங்களில் அதிமுக உடன் அண்ணாமலைக்கு ஏற்பட்ட பிணக்கே கூட்டணி உடைய காரணமாக இருந்து உள்ளது. ஆனால், அதிமுக உடன் இணக்கமாக பயணிக்கும் ஒருவரை மாநிலத் தலைவராக நியமித்து அடுத்த தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்த பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அல்லது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தலைவராக நியமிக்க தேசியத் தலைமை ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதே வேளையில் டெல்லி சென்றுள்ள தமிழிசை சவுந்தராஜன், மாநிலத் தலைவர் பதவிக்கு காய் நகர்த்துவதாக கூறப்படும் நிலையில் அவருக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தேசியத் தலைமையிலும் மாற்றமா?
”இன்னும் ஒருவாரத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 15 முதல் 20 நாட்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய மாநிலத் தலைவர் அறிவிக்கப்படுவார்” என பாஜக துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தெரிவித்து உள்ளார். மேலும் பாஜக தேசியத் தலைமைக்கு ஜே.பி.நட்டாவை தவிர புதிய நபர் ஒருவர் நியமனம் செய்யப்படுவார். மீண்டும் ஒருமுறை பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கவும் கட்சியில் விதிகள் உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.