பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அண்ணாமலைக்கு என்ன பதவி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அண்ணாமலைக்கு என்ன பதவி தெரியுமா?

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அண்ணாமலைக்கு என்ன பதவி தெரியுமா?

Kathiravan V HT Tamil
Published Apr 12, 2025 06:02 PM IST

வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய பாஜக மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மேடையில் அண்ணாமலை செய்த சம்பவம்!
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மேடையில் அண்ணாமலை செய்த சம்பவம்!

பாஜக மாநிலத் தலைவராக தேர்வாகி உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ், துண்டு, பிரசாதம் ஆகியவற்றை கிஷண் ரெட்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். எல்.முருகன், தமிழிசை சௌந்தராஜன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், ஏ.ஜி.சம்பத் ஆகியோருக்கும் தேசிய பொதுக்குழுவில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல்

பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான விருப்பமனுத்தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்து இருந்தார். நயினார் நாகேந்திரன் பெயரை அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல்.முருகன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்து இருந்தனர். நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு விருப்பமனுத் தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

யார் இந்த நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்த நயினார் நாகேந்திரன், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

பாஜக- அதிமுக கூட்டணிக்கு வலு?

அதிமுக தலைவர்களான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறித்த பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையின் பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை அதிமுக வெளியிட்டது. 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருகட்சிகளும் தனி அணி அமைத்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவினர். நேற்றைய தினம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி படுத்தினார். 

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகாலம் இருக்கும் நிலையில் அதிமுகவுடன் சுமூக உறவை பேணவும், அதிமுக-பாஜக கூட்டணியை வலு செய்யவும், அண்ணாமலைக்கு பதிலாக அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை டெல்லி மேலிடம் தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு விரைவில் தேசிய அளவில் புதிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.