TN BJP: பள்ளி மாணவிகள் மது குடிக்கும் விடியோவை பரப்பிய பாஜக பிரமுகர் - கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு
பள்ளி மாணவிகள் மது குடிப்பது போன்ற விடியோ வெளியிட்ட பாஜகவை சேர்ந்த பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 4ஆம் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஊடகப்பிரிவு மாநில செயலாளராகவும் இருந்து வரும் சவுதாமணி என்பவர் தனது எக்ஸ் விடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், பள்ளி மாணவிகள் மதுகுடிப்பது போன்ற காட்சிகள் இடம்பிடித்திருந்தன. அத்துடன் அந்த விடியோ பதிவில், "மனது வலிக்கிறது. வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது. திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளை தானே செய்கிறது. மது... கஞ்சா.... திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், மூன்று பள்ளி மாணவிகள் சீருடையுடன் கையில் பாட்டிலில் மதுபோன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த அந்த வீடியோவை பார்க்கும்போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து குடிக்க சொல்லி விடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக தெரிகிறது
சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொதுஅமைதியை கெடுக்கும் வகையில் ஏதோ உள்நோக்கத்துடன் மேற்படி விடியோவை பரப்பிய சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சவுதாமணி மீது, கலகம் செய்வதற்கு தூண்டுதல், பொது அமைதியைக் குலைத்தல், வதந்தி பரப்புதல், குழந்தைகளுக்கு மதுபானம் வழங்குதல், சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் குழந்தையின் அடையாளங்களை வெளியிடுதல் என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன்பின்னர் சென்னையில் இருந்த சவுதாமணியை கைது செய்து திருச்சி அழைத்து வந்த போலீசார், திருச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சவுதாமணி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அத்துடன், முதல் தகவல் அறிக்கையை படித்து பார்த்த மாஜிஸ்திரேட்டு, சவுதாமணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறயதோடு, அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்தார். சவுதாமணிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஜாமினில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், "என்மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. தமிழ்நாட்டில் மாணவர்கள் போதை பழக்கத்தில் இருந்து மீட்க முதல் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்