BH Abdul Hameed: 3 முறை செத்து பிழைத்து விட்டேனா.. அழுது புலம்பிய வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது!
BH Abdul Hameed: பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை கவர்ந்தார். இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக அவர் இறந்து விட்டதாக இணையத்தில் வெளியானது. இந்நிலையில் மரண செய்தியில் உண்மை இல்லை என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளர்.

BH Abdul Hameed: தனது தனித்துவமான தமிழ் உச்சரிப்பால் பிரபலம் அடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எஸ். அப்துல் ஹமீது தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை கவர்ந்தார். இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக அவர் இறந்து விட்டதாக இணையத்தில் வெளியானது. இந்நிலையில் மரண செய்தியில் உண்மை இல்லை என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளர். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,
"நம் எல்லோரையும் படைத்த ஏக இறையின் திருவருள் உங்கள் அனைவர் மீதும் பொழிவதாக.. மாண்டவன் மீண்டு வந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்க கூடும். நேற்று இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரையில் நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியை கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயம் படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலை கேட்டதும் அதை கதறி அழுவதை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. (கண் கலங்கிய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்)
என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை
எத்தனை ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நான் நினைத்துக் கொண்டேன். நேற்று இலங்கை பத்திரிகைகளில் ஒரு கட்டுரையை நான் எழுதி இருந்தேன். அந்த கட்டுரையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது. மரணம் மனிதனுக்கு தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து அவனுடைய நல்ல பக்கத்தை மட்டும், அந்த நல்ல நினைவுகளை மட்டும் பேசி மகிழ்வது. அப்படி ஒரு அனுபவம் தான் எனக்கு கிடைத்திருக்கிறது.
காரணம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை நேசித்தாலும் என் துறைசார் பொறாமை காரணமாக அல்லது மதமாச்சரியங்கள் கொண்ட சிலர், விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இதுவரை காலமும் எதிர்மறையான விமர்சனங்களை பரப்பி இருக்கலாம். ஆனால் இந்த செய்தியை கேள்விப்பட்ட நேரம் முதல் என்னைப் பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே நினைத்து இருப்பார்கள். இது நம் வாழும் காலம் வரை தொடர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
3 ஆவது அனுபவம்
இது எனக்கு மூன்றாவது அனுபவம். ஆம்..நாம் செத்துப் பிழைப்பது.. முதல் அனுபவம் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்து விட்டார்கள் என்ற வதந்தி இங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பரவி தமிழக பத்திரிக்கைகளிலும், கேரளத்து மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்ததை என்னுடைய வானிலைகளில் வழிப்போக்கன் என்ற நூலில் பதிவு செய்திருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் youtube தளம் நடத்தும் ஒருவர் அதிக பணம் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடைய படத்தை போட்டு பிரபல டிவி தொகுப்பாளர் மரணம். கதறி அழுதது குடும்பம் என்று செய்தி பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை.
இது மூன்றாவது முறை. ஆகவே மூன்று முறை நான் உயிர்த்தெழுந்து இருக்கின்றேனா என்று நகைச்சுவையாக என்ன தோன்றுகிறது. நாம் இறந்த பிறகு நம்மீது உண்மையான அன்பும் பாசமும் வைத்திருந்தவர்கள் யார் யார் என்று பார்ப்பதற்கு நாம் இருக்க மாட்டோம். ஆனால் வாழும் காலத்திலேயே ஒரு முறை அதை கணிக்க அதை அறிந்து கொள்ள இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான் இது.
ஆகவே இந்த செய்தியை முதல் முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபம் விட்டிருக்கலாம். அந்த சாபங்களில் இருந்து இந்த மனிதரை காப்பாற்றும்படி அதே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன். ஏதோ ஒரு நன்மையை செய்திருக்கின்றார் அவர். ஆகவே அன்புள்ளங்களே எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கமும்.. நன்றி" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்