"தைரியமாக இருங்கள்.. நீதியை நிலைநாட்ட அதிமுக துணை நிற்கும்" அஜித்குமார் தாய்க்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்
இன்று எடப்பாடி பழனிச்சாமி அஜித் குமாரின் தாயிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர் மீது கோயிலுக்கு வந்த நிக்கி என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து திருப்புவனம் போலீசார் அடித்துக் கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அஜித் குமார் குடும்பத்திற்கு ஆறுதல்
இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அஜித் குமாரின் தாயிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் கூறிதாவது, "துரதிஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்களது மகன் அஜித்குமார் மரணமடைந்தார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுடன் இருக்கும். இது மீள முடியாத துயரம். தாய் தனது மகனை இழப்பது மிகப்பெரிய கொடுமையான விஷயம். இதை யாராலும் மன்னிக்க முடியாதது இது பெற்ற தாய்க்கு தான் அந்த வலி தெரியும். நீங்கள் மனம் தளராமல் இருங்கள். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. நீங்கள் நிம்மதியாக இருந்தால்தான் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளோம் நீதி நிலைநாட்டப்படும் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் மனம் தளராதீர்கள் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த நிகழ்வு மேலும் முடியாதது ஒரு கொடுமையான சம்பவம் நடந்து முடிந்துள்ளது உங்களுடைய மகனின் இறப்பிற்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்கள் தண்டிக்கப்படும் வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். தைரியமாக இருங்கள்" என்று கூறினார்.