Kaduvetti Guru: ’திமுக கிளைச்செயலாளர் முதல் வன்னியர் சங்க தலைவர் வரை’ சர்ச்சை நாயகன் காடுவெட்டி குருவின் கதை!
“ஜெ.குருவின் சர்ச்சை பேச்சுக்கள் அவரது அரசியலில் எந்த அளவுக்கு ஏற்றத்தை கொடுத்ததோ, அதே அளவுக்கு சிக்கலையும் ஏற்படுத்தியது”
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி எனும் கிராமத்தில் 1961ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜெயராமன் படையாச்சி - கல்யாணி அம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார்.
இவரது தந்தை ஜெயராமன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டதால் அவரது தாயாரின் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கு பள்ளிப்படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு பட்டமும் பெற்ற இவர் 1986ஆம் ஆண்டில் திமுக கிளைக்கழக செயலாளராக அரசியல் வாழ்வை தொடங்கினார்.
தங்கள் பகுதி திமுகவில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறி அக்கட்சியில் இருந்து விலகினார். வன்னியர் சங்கத்தை விரிவு படுத்துவதற்காக எம்.கே.ராஜேந்திரன், விரபோக மதியழகன் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஜெ.குருவை வன்னியர் சங்கத்தில் இணைத்தனர்.
வன்னியர் சங்கத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து பாமகவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக உயர்ந்தார். பின்னர் வன்னியர் சங்கத் தலைவராகவும், 2001, 2011 ஆகிய தேர்தல்களில் ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ஜெ.குருவின் சர்ச்சை பேச்சுக்கள் அவரது அரசியலில் எந்த அளவுக்கு ஏற்றத்தை கொடுத்ததோ, அதே அளவுக்கு சிக்கலையும் ஏற்படுத்தியது. பொதுக்கூட்டங்களில் உணர்ச்சி பெருக்குடன்பேசுவதால் ‘வன்னியர் சமூக இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகிறார்’ என்று குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது போடப்பட்ட வழக்குகள் ஏராளம்.
கடந்த அதிமுக அட்சிக்காலத்தின் போது 2013ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு விழாவில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சாதிகள் குறித்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் - வன்னிர்கள் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்ததது. இதன் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரின் சர்ச்சை பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக தனது தந்தையை கொலை செய்த மாமாவின் தலையை வெட்டி, காளி கோயிலில் உள்ள சூலத்தில் குத்தி வைத்ததாகவும் ஜெ.குருவின் மீது வழக்குகள் தொடரப்பட்டது ஆண்டிமடம் காவல் நிலையத்தில் உள்ள குற்றவாளிகள் பட்டியலில் ஜெ.குருவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து ஜெ.குருவிடம் கேட்டபோது “என்னுடைய மக்களுக்காக போராட்டத்தில் இறங்கி உள்ளேன். என்னை குற்றவாளியாக மட்டுமல்ல, சுட்டுக்கொன்றாலும் என் மக்களுக்காக மரணத்தை ஏற்றுக்கொள்வேன்” என உணர்ச்சி பொங்க பதிலளித்தார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெ.குரு கடந்த 2018ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி காலமானார்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜெ.குருவின் தாய், தங்கை, மகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து குற்றச்சாட்டு வைத்தது அப்போது பேசுபொருளானது.