பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணி அவசர டெல்லி பயணம்? நடக்க போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணி அவசர டெல்லி பயணம்? நடக்க போவது என்ன?

பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணி அவசர டெல்லி பயணம்? நடக்க போவது என்ன?

Kathiravan V HT Tamil
Published Jun 30, 2025 07:13 AM IST

கட்சியில் முழு அதிகாரம் தன்வசம் உள்ளதாக அன்புமணி கூறி வரும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணி அவசர டெல்லி பயணம்? நடக்க போவது என்ன?
பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணி அவசர டெல்லி பயணம்? நடக்க போவது என்ன?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் சூழலில், அன்புமணி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் முழு அதிகாரம் தன்வசம் உள்ளதாக அன்புமணி கூறி வரும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாமகவில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கும் மேலாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. ராமதாஸ் தரப்பு திருவண்ணாமலையில் நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும், அன்புமணி தரப்பு பணையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், அன்புமணியின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

பாமகவின் உட்கட்சி விதிகளின்படி, தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்களுக்கு மட்டுமே தேர்தல் சின்னம் பெறுவதற்கு கையெழுத்திடும் அதிகாரம் உள்ளது. இருப்பினும், பொதுக்குழு கூட்டுவதற்கு ராமதாஸின் வழிகாட்டுதல் தேவை என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அன்புமணி டெல்லி செல்வது தேர்தல் ஆணையத்திற்கு செல்வதற்காகவா அல்லது பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பதற்காகவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அன்புமணி இன்று விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு ஒரு நாள் தங்கி முக்கிய பேச்சுகளை மேற்கொள்வார் எனவும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் மூலம் கட்சியின் உட்கட்சி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுமா அல்லது புதிய முடிவுகள் எடுக்கப்படுமா என்பது குறித்து அவரது பயணத்திற்கு பின்னர் முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.