Veeramuthuvel: ‘இனி விண்வெளியிலும் AI தொழில்நுட்பம் தான்’ - ‘சந்திராயன் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு!
விண்வெளித்துறையில் இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும். விண்வெளியில் உள்ள பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை, பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டுவந்து அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது - விருதுநகரில் -சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு!
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்று வரும் "காஃபி வித் கலெக்டர்" கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கலந்து கொண்டு விண்வெளிப் பயணம் என்ற தலைப்பில் சந்திராயன்-3 உருவான விதம் குறித்து சிறப்புரையாற்றினார்.
மாணவர்களிடையே அவர் சந்திராயன் 3 செயல்திட்டத்தில் இருந்த அறிவியல் சவால்களை எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது பற்றியும், விண்வெளித்துறையில் கணிதமும், இயற்பியலும் எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும் விண்வெளித்துறையில் இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் கூறினார்.
இது மட்டுமில்லாமல், கடினமாக உழைத்தால் 100 சதவிகிதம் வெற்றியை பெற முடியும் என்ற அவர்,படிக்கும் காலங்களில் மாணவர்கள் ஒழுக்கத்துடன்,தெளிவாக படிக்க வேண்டும் என்றும் பாடங்கள் அனைத்தும் முக்கியம்.
அது வாழ்க்கைக்கு பயன்படுவதோடு, வாழ்க்கைப் பயணத்தில் பல மாறுபட்ட சூழ்நிலைகளை கையாள அது உதவியாக இருக்கும் என்றும் பேசினார். அத்துடன் பிடித்த துறைகளில் திறமைகளை வளர்த்து கொண்டு 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.
பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த வீரமுத்துவேல், நிலவில் இருக்கும் ஆற்றலை பயன்படுத்தி செவ்வாய்க்கு எளிதாக செல்ல முடியும் என்றும் அதே நேரத்தில் பூமிக்கு தேவையான மின் ஆற்றலையும் குறைந்த செலவில் நிறைவேற்ற முடியும் என்றும் பேசினார்.
மேலும், விண்வெளியில் உள்ள பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டுவந்து அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்போது ஆராய்ச்சியில் உள்ளதாகவும் இன்னும் 2 ஆண்டுகளில் அது நிறைவடையும் என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் காலநிலை மாற்றங்களை இன்னும் துல்லியமாக அறிய முன்னேற்றம் தேவைப்படுவதாகவும், சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில் இஸ்ரோவின் பயணம் அமைந்துள்ளதாகவும் அவர் பதிலளித்து பேசினார். நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.
டாபிக்ஸ்