'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

Kathiravan V HT Tamil
Published Apr 28, 2025 04:48 PM IST

”தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?”

'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி
'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’’ எனச் சொல்லியிருக்கிறார்.

‘தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த… கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.

10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா? 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் எனத் தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ‘ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’ என ஜோசியம் சொல்கிறார்! தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, ’11-ஆவது தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தைவிட்டே ஓடியவர்தான் பழனிசாமி.

இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?

தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ’தோல்வி’சாமி அ.தி.மு.க.வைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், உடுமலை ராதாகிருஷ்ணுக்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார்.

மேடையில் நாற்காலிக்குச் சண்டை

திருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற 'நாற்காலிச் சண்டை'யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது. அந்த உடுமலை ராதாகிருஷ்ணனைத் தன் பக்கத்தில் அமர வைத்ததோடு அரசு கேபிள் டிவி தலைவர் பதவியையும் பழனிசாமி வழங்கினார்.

''தன்னுடைய துறையில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை'' என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பழனிசாமி. ''மேடையில் நாற்காலிக்குச் சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவிப் பறிப்பா?'' என அ.தி.மு.க.வில் நடந்த குடுமிப்பிடிச் சண்டையை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா பழனிசாமி.

மங்குனி மந்திரிசபை

தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது

“பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது'' என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த... 11 எம்.எல்.ஏ-க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.