’ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கூண்டுக் கிளியாக உள்ளேன்!’ மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கூண்டுக் கிளியாக உள்ளேன்!’ மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!

’ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கூண்டுக் கிளியாக உள்ளேன்!’ மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 02:54 PM IST

கூட்டணி விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவும், தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

’ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கூண்டுக் கிளியாக உள்ளேன்!’ மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!
’ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கூண்டுக் கிளியாக உள்ளேன்!’ மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்!

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்தித்தார்.

சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கடும் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து, அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தின் பல பகுதிகளில் நிகழும் குற்ற சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார். கொங்கு பகுதியில் வீடு புகுந்து விவசாயிகள் கொல்லப்படுவது, தென் தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நடைபெறுவது, சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் அதிகரிப்பது என பல பிரச்சினைகளை எடுத்துரைத்தார். "தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுமே கொலை காடுகளாக மாறிவிட்டன," என்று கவலை தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊட்டியில் இருந்து பேசுவதாகவும், சென்னையின் வெயிலுக்கு வந்தால் அவருக்கு உண்மை நிலை புரியும் என்றும் கூறினார். மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக 2026ல் மக்கள் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம்

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அண்ணாமலை, அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தமிழக அரசின் அரசியல் சூழ்ச்சியில் சிக்கியிருப்பதாகவும் கூறினார். ஓய்வு பெறுவதற்கு சில நாட்களே இருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் அவருக்கு ஆதரவாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதிகாரத்தில் இருப்பவர்கள் அநீதி செய்தால் அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கூண்டுக்கிளி

மத்திய அமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு, தான் ஆடு, மாடுகளுடன் விவசாயம் பார்த்து நிம்மதியாக இருப்பதாகவும், நேரம் கிடைக்கும்போது கோயிலுக்குச் செல்வதாகவும், ரமணாஸ்ரமத்தில் தியானம் செய்வதாகவும் தெரிவித்தார். கட்சி சொல்லும் பணிகளை செய்வதாகவும், தலைமைப் பொறுப்புகளின் சுமையை தவிர்த்து வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பதாகவும் கூறினார். புத்தகம் படிக்கவும், குழந்தைகளுடன் நேரம் செலவிடவும், பெற்றோருடன் நிம்மதியாக உணவு உண்ணவும் நேரம் கிடைப்பதாகவும், இதுவே தனக்கு சிறப்பாக தோன்றுவதாகவும், இப்படியே பயணிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு பணி செய்வதை ஒரு பாக்கியமாகக் கருதுவதாகவும், தினமும் 2000-3000 பேர் மோர் குடிப்பதற்காக வீட்டுக்கு வெளியே மோர் வைப்பதாகவும் குறிப்பிட்டார். தேவையில்லாத வேறு வேலைகளில் தான் மாட்டவில்லை என்றும், தனது பணியை சந்தோஷமாக செய்வதாகவும் கூறினார். அவர் தன்னை ஒரு "கூண்டு கிளி" என்று கூறி, தான் நிம்மதியாக இருக்கும்போது ஏன் தன்னை கூண்டுக்குள் அடைத்து வைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறினார். தான் அப்பாவாகவும், மகனாகவும், தொண்டனாகவும் இருக்க ஆசைப்படுவதாகக் கூறினார். ஒரு சாமானிய மனிதனாக இருப்பதே தனக்கு ஒரு சக்தியாக தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

கூட்டணி மற்றும் முதலமைச்சர் விமர்சனம்

கூட்டணி விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவும், தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், பிரதமர் மோடியின் இதயத்தில் அவருக்கு சிறப்பு இடம் உள்ளதாகவும் கூறினார்.