Tamil Top 10 News: அண்ணாமலை எடுத்த திடீர் சபதம் முதல்.. டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு வரை - டாப் 10 செய்திகள் இதோ..!
Tamil Top 10 News: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சபதம், வானிலை தொடர்பான அறிவிப்பு, பரபரப்பாகும் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், வானிலை தொடர்பான முன்னெறிவிப்பு, க்ரைம் உள்பட டாப் 10 முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் -அண்ணாமலை
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து, அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கே வெளியே நின்று என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 நாட்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி வனப்பகுதியில் இருக்கும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மார்கழி அமாவாசையை ஒட்டி வரும் 28ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கைத்தறித்துறை அறிவுறுத்தல்
பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என கைத்தறித்துறை அறிவுறுத்தல். 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றன. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வானிலை அறிவிப்பு
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலை அனுப்பிய கடிதம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கையை பகிர்ந்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.
அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு ஆர்.நல்லக்கண்னு பெயர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும் வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்துக்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டிடம்” எனப் பெயரிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும் மருத்துவ வசதியும் செய்து தர தமிழக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் பேட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்கட்சி அல்ல, பாஜகதான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள முயல்கிறார். அண்ணாமலை லண்டன் சென்றுவிட்டு வந்த பிறகு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
FIR லீக் - அதிகாரிகள் மீது நடவடிக்கை"
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் வெளியாக காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.