Anna University issue: சிறுமி முதல் பாட்டி வரை! ஒருத்தர விடல! இதுவேற உள்ள நடந்து இருக்கா? ஈபிஎஸ் சொன்ன திகில் சம்பவம்!
Anna University issue: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது என்பதுதான் மக்களின் சந்தேகமாக உள்ளது.
சிறுமிகள் முதல் பாட்டிக்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்
தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகாக தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், தவாக தலைவர் வேல்முருகனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமனம் செய்யாததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். ஆனால் நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கும் மரபு உள்ளதால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை.
இதனை காரணம் காட்டி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து கோஷம் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
ஈபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு பொறுப்பெற்று 5வது முறையாக ஆளுநர் உரையாற்றும் நேரத்தில், அவர் உரையாற்ற முடியாமல் வெளியேறிவிட்டார். அதனால் சபாநாயகர் உரையாற்றி வருகிறார். இது மேதகு ஆளுநர் உரை அல்ல, சபாநாயகர் உரையாகத்தான் பார்க்க வேண்டும். ஆட்சி பொறுப்பேற்று 4ஆண்டுகளாக ஆளுநர் உரையில் என்ன இருந்ததோ, அதையேதான் சொல்லி வருகிறார்கள். அரைத்த மாவையே அரைத்து வருகின்றனர்.
நேற்று முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மாணவிகள் அணிந்த கருப்பு துப்பட்டாவை கழற்றிவைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்று உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கருப்பை கண்டால் ஏன் அச்சப்படுகிறார்.
சிறுமிகள் முதல் பாட்டிக்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது மிக மிக கேவலமானது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது என்பதுதான் மக்களின் சந்தேகமாக உள்ளது.