Delimitation: 'ஸ்டாலின் அழைப்பை புறக்கணித்த ஆந்திர அரசியல் தலைவர்கள்!’ ஜகா வாங்கிய YSRCP, JSP கட்சிகள்! நடந்தது என்ன?
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டுக் குழு கூட்டத்தில் யாரும் பங்கேற்காத நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நியாமான முறையில் மேற்கொள்ள சொல்லி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டுக் குழு கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளன.
கூட்டுக்குழு கூட்டம்
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர்மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
மேலும் படிக்க:- ’தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் 12 தொகுதிகளை இழப்போம்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார்.