Teachers Protest : மயங்கி விழும் ஆசிரியர்கள்; பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது- அன்புமணி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Teachers Protest : மயங்கி விழும் ஆசிரியர்கள்; பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது- அன்புமணி

Teachers Protest : மயங்கி விழும் ஆசிரியர்கள்; பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது- அன்புமணி

Divya Sekar HT Tamil Published Sep 30, 2023 12:47 PM IST
Divya Sekar HT Tamil
Published Sep 30, 2023 12:47 PM IST

கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்வராதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்ணாநிலை மேற்கொண்டுள்ள ஆசிரியர்களின் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களை அரசு இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேரணி நடத்தியுள்ளனர். கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 25-ஆம் நாள் முதலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரி 27-ஆம் நாள் முதலும், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று 28-ஆம் நாள் முதலும் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

முதல் போராட்டம் தொடங்கி 6 நாட்கள் ஆகி விட்ட நிலையில் உண்ணாநிலை மேற்கொண்டுள்ள ஆசிரியர்களின் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களை அரசு இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. அவர்கள் இப்போது இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை 14 ஆண்டுகளாகவும், பணி நிலைப்புக் கோரிக்கை 12 ஆண்டுகளாகவும், பழைய ஓய்வூதியக் கோரிக்கை 20 ஆண்டுகளாகவும் எழுப்பப்பட்டு வருகின்றன. தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஐந்தாண்டுகளாக போராடி வருகின்றனர். 

இது தொடர்பாக அமைச்சர்கள் நிலையிலும், செயலாளர் நிலையிலும், இயக்குனர் நிலையிலும் பல கட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டன. அப்பேச்சுகளின் போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த அரசு, அதை செயல்படுத்தாததால் தான் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர்களின் உழைப்பை சுரண்டும் செயல்களில் அரசே ஈடுபடுவது நியாயமற்றது. கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் அவர்களின் உரிமைகளைக் கோரி போராடும் நிலைக்கு தள்ளுவதே அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம் ஆகும். 

இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.