இணைப்பு வசதியின்றி திணறும் புதிய பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி!
கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையாக நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இவ்வளவுக்குப் பிறகும் சென்னை விமான நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் இணைக்கும் மெட்ரோ தொடர்வண்டித் திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது.
கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையம் ஏற்கனவே கோயம்பேடு புறநகர் பேருந்து முனையம் செயல்பட்டு வந்த இடத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையின் வட எல்லையான எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கிளாம்பாக்கத்திகிருந்து 50 கி.மீக்கு மேல் பயணிக்க வேண்டும்.