’வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்’ விளாசும் அன்புமணி!
”பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அதை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையற்ற பணிச்சுமையும் ஏற்படுகிறது”

வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அரசின் இரு முக்கியத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை ஆகியவற்றில் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பவும், தகுதியான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முதன்மைத் துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அதை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையற்ற பணிச்சுமையும் ஏற்படுகிறது.