Anbumani Ramadoss: தைலாபுரத்தில் ராமதாஸ் உடன் பேசியது என்ன? கடுகடு முகத்துடன் அன்புமணி பேட்டி!
நேற்றைய தினம் மேடையிலேயே கோபமாக பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, ஜனநாயக கட்சியில் நடைபெறும் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது வழக்கம் என அன்புமணி கருத்து

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மருத்துவர் ராமதாஸ் உடன் பேசியது என்ன?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ஐயா உடன் கட்சியின் வளர்ச்சி பற்றி பேசினேன். வரும் சட்டமன்றத் தேர்தல், சித்திரை முழு நிலவு மாநாடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள், விவசாய மாநாட்டுக்கு பிறகு முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து குழுவாக விவாதித்தோம். வரவிருக்கும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் எங்கள் செயல்திட்டங்கள், போராட்டங்கள், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம் என்றார்.
உட்கட்சி விவகாரம் குறித்து பேச வேண்டாம்
நேற்றைய தினம் மேடையிலேயே கோபமாக பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, ஜனநாயக கட்சியில் நடைபெறும் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடப்பது வழக்கம். எங்களுக்கு ஐயா, ஐயாதான். எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்னை பற்றி நீங்கள் பேச வேண்டாம். அது பற்றி நாங்கள் பேசிக் கொள்வோம் என கூறினார்.