குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்க போகிறீர்களா? பெரிய ஆபத்து இருக்கு! சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி எச்சரிக்கை!
நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்!

பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
எல்லையில்லாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்!
பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இராம்சர் தலம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை நீரை உறிஞ்சி வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணியை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் செய்கிறது. யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் உள்ளிட்ட 115 வகையான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள், 9 ஊர்வன வகைகள், 46 வகை மீன்கள், 5 வகையான ஒட்டு மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள் போன்றவற்றின் வாழிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது. அதை ஒட்டிய பகுதிகளில் குப்பை எரி உலை அமைக்கப்பட்டால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மட்டுமின்றி, அங்கு வாழும் அரிய உயிரினங்களுக்கும் எல்லையில்லாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.