‘பொள்ளாச்சி குற்றவாளிகளில் 3 கட்சிகளை சேர்ந்தவர்கள்.. ஒரு கட்சி பெயர் மட்டும் ஏன் வருகிறது?’ பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி
‘அன்று போராட்டிய மகளிர் சங்கங்கள் கூட, பாதிக்கப்பட்ட பெண்ணை வந்து சந்திக்கவில்லை என்பது தான் எங்களின் வருத்தம். பொள்ளாச்சியில் ரவுண்டான வரை போராட வந்த அரசியல்வாதிகள், அடுத்து 10 கி.மீ., தூரத்தில் இருந்த அந்த பெண்ணை சந்திக்க ஒருவர் கூட வரவில்லை’

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன் முதலில் புகார் அளித்த பெண்ணின், வழக்கறிஞரான கோபாலகிருஷ்ணன், அந்த வழக்கு தொடர்பான தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
பொள்ளாச்சி வழக்கு இரண்டாக நடந்தது
‘‘பொள்ளாச்சி வழக்கையை இரு வழக்காக பார்க்க வேண்டும். ஒன்று பாலியல் வழக்கு, மற்றொன்று பாலியல் வழக்கைத் தொடர்ந்து நடந்த அடிதடி வழக்கு. அடிதடி வழக்கில் ஜாமினில் வந்தது தான், மீடியாவின் இத்தனை பேச்சுகளுக்கு காரணம். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்ததைப் போல, ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். சம்மந்தப்பட்ட பெண் புகார் கொடுத்ததால், அந்த பெண்ணின் அண்ணனை இவர்கள் தாக்கினார்கள். அது இரண்டாவது எப்.ஐ.ஆர்., ஆகிறது. அந்த வழக்கில் தான், அவர்கள் கைதாகி ஃபெயிலில் வந்தார்கள். ஆனால், பாலியல் வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கும் போது, பாலியல் வழக்கில் அவர்கள் வெளியே வந்ததைப் போல பேசப்பட்டது.