தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Amman Arjunan, Mla Who Managed To Come To Drink Tea

BJP Vs ADMK: டீ குடிக்க வந்தேன்பா.. சமாளித்த எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 27, 2024 08:33 AM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து மிக முக்கியமான நபர்கள் பா.ஜ.கவில் இணைய இருப்பதாக கூறிய நிலையில் நேற்று மாலை பாஜக நிகழ்ச்சி நடக்க இருந்த தனியார் விடுதியின் முன் வந்த எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் டீ குடிக்க வந்தேன்பா என்று சொல்லி சமாளித்தார்.

டீ குடிக்க வந்தேன்பா.. சமாளித்த எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன்
டீ குடிக்க வந்தேன்பா.. சமாளித்த எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன்

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பான பாஜக தனது அணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இன்று பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் பல கட்சியினரை தனது கட்சிக்கு அழைத்து வரும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து மிக முக்கியமான நபர்கள் பா.ஜ.கவில் இணைய இருப்பதாக நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு முக்கியமான நபர்கள் இணைவார்கள் எனவும், அதிலும் குறிப்பாக அதிமுகவில் இருந்தும் இணைவார்கள் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை இணைப்பு விழா நிகழ்வானது திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக இணைப்பு நிகழ்ச்சி நடப்பதாக இருந்த நட்சத்திர ஹோட்டல் அருகே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று சுற்றி பார்த்தார்.

கோவை ரெசிடன்ஸி ஹோட்டலில் பாஜகவில் அதிமுகவை சேர்ந்தவர்கள் இணைய வாய்ப்பு என தகவல் பரவி இருந்த நிலையில், யார் இணைகின்றார்கள் என்பதை அறிய , அதிமுக கோவை மாநகர செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் அர்ஜுனன் ஹோட்டலுக்கு எதிரே உள்ள பங்களாவிற்கு ஆதரவாளர்களுடன் வந்து சென்றார்.

அந்த பகுதியில் சென்ற அம்மன் அர்ஜூனனிடம் கோவை ரெசிடன்ஸி ஹோட்டல் பக்கம் வந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும் வழக்கமாக டீ குடிக்க இந்த பக்கம் வருவேன் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இது குறித்து அதிமுக வட்டாரங்களில் கேட்டபோது , யாராவது பா.ஜ.க வில் இணைய வருகிறார்களா என்பதை பார்ப்பதற்காக அவர் வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளரான அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ நட்சத்திர ஓட்டல் பக்கம் சுற்றி திரிந்த்தால் சலசலப்பு ஏற்பட்டது.

முன்னதாக நேற்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள், எனவும் மேலும் யார் வருவார்கள் என்பதை நாளை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.

நேற்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க மாநிலதலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்